உத்தரப் பிரதேசத்தில் 36 வயது நபரான சோனு ஷர்மா, தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சோனு, தனது 28 வயது மனைவி சஞ்சல் ஷர்மா, ஒரு பீட்சா கடையில் வேலை செய்யும் சக ஊழியருடன் தவறான உறவில் இருப்பதாக சந்தேகித்தார். இந்த சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சோனு, கடந்த இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் இருந்தார். அவர் சஞ்சலிடம் வேலையை விடுமாறு கேட்டிருந்தார், ஆனால் குடும்பத்தை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை கூறி அவள் மறுத்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை, மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, சோனு சஞ்சலின் முகத்தை துணியால் மூடி, கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களின் ஏழு வயது மகளும் ஐந்து வயது மகனும், சஞ்சலின் கூச்சலைக் கேட்டு எழுந்து தடுக்க முயன்றனர், ஆனால் சோனு அவர்களைத் தள்ளிவிட்டார்.
பின்னர், சோனு காவல்துறையை அழைத்து, தான் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக கூறி தப்பியோடினார். ஆனால், காவல்துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர். இந்த தம்பதியர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து, தாத்ரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
