சேலம் மாவட்டத்தில் உள்ள கடைக்காரன் வளை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை நெசவு வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் அண்ணாமலை தனது 2 மகன்களுக்கு விஷமாத்திரையை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு விட்டதாக தனது தந்தையிடம் செல்போனில் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணபதி தென்னந்தோப்புக்கு உறவினர்களுடன் சென்று அண்ணாமலையையும் அவரது மகன்களையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை உயிரிழந்தார். இரண்டு சிறுவர்களின் உயிருக்கும் ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கணபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகனின் தற்கொலைக்கு அவரது மனைவி கோகிலா, மாமியார் மல்லிகா செல்போனில் கோகிலாவுடன் பேசும் அந்த நபர் மூன்று பேரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலையும் கோகிலா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அண்ணாமலை சப்பானிப்பட்டியில் இருக்கும் மாமியார் வீட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கோகிலாவின் செல்போன் எண்ணுக்கு வேறொருவர் மிஸ்டு கால்களும், எஸ்.எம்.எஸ் களும் அனுப்பினார். இது தொடர்பாக கேட்டபோது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கோகிலாவின் தாய் அண்ணாமலையை கண்டித்தார். மேலும் கோகிலாவுக்கு வரும் செல்போன் அழைப்புகள் குறித்து கேட்கக்கூடாது என தெரிவித்தார். இதனால் கோபத்தில் அண்ணாமலை தனது மகன்களை அழைத்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் கோகிலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது எனது கணவர் திட்டியதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் அண்ணாமலை தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை மகன்களுக்கு கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.