கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள அஷ்டபுஜ ஸ்நான குன்றுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த புருனோ ரோஜர் (52) என்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணி, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து படுகாயமடைந்தார். கடந்த புதன்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்தில், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விழுந்த அவர், தனது இடது கால் மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சுமார் இரண்டு நாட்களாக அங்கேயே தவித்துள்ளார்.
மேலும் கடுமையான வலியில் இருந்தபோதிலும், தன்னிடம் இருந்த ஒன்றரை லிட்டர் தண்ணீரை மட்டும் அருந்தி உயிர் பிழைத்த அவர், மெல்ல ஊர்ந்து சென்று அருகிலிருந்த ஒரு வாழைத் தோட்டத்தை அடைந்துள்ளார். தோட்டத்தில் இருந்த விவசாயிகள் காயமடைந்த புருனோவைக் கண்டு உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரும், தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகளும் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கதிராம்புரா கிராமத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர், தனிமையில் மலையேறியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இரண்டு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
