மும்பை அருகே உள்ள வாஷி செக்டர் 28 பூங்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த காணொலியில் இடம்பெற்ற இரண்டு மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளனர். தாங்கள் பூங்காவில் அமர்ந்து லூடோ விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் தங்களை பின்னால் இருந்து ரகசியமாக படம் பிடித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர் அந்தக் காணொலி சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கூற்றுப்படி, பூங்காவில் தாங்கள் விளையாடிக் கொண்டிருந்ததை தங்களுக்குத் தெரியாமல் அந்தப் பெண் படம் பிடித்துள்ளார். அந்தக் காணொலி இணையத்தில் பகிரப்பட்டதை அறிந்த பிறகு, மாணவர்கள் அந்தப் பெண்ணிடம் சென்று ஏன் தங்களை படம் பிடித்து காணொலியை பகிர்ந்தார் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் தங்களது தரப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
மேலும், தங்களை கேள்வி கேட்டபோது போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக அந்தப் பெண் மிரட்டியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படவில்லை. மாணவர்கள் வாஷி காவல் நிலையத்தை அணுகி, சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கு முன்பு அந்தப் பெண் வெளியிட்ட காணொலியில், வாஷி செக்டர் 28 பகுதி ‘மினி கடற்கரை’ போல மாறி வருவதாக கூறியிருந்தார். பூங்காவில் இளைஞர்கள் பொதுவெளியில் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். தட்டிக்கேட்டபோது சில மாணவர்கள் தன்னை பின்தொடர்ந்து அருகிலிருந்த கடை வரை வந்து தொந்தரவு செய்ததாகவும், இதனால் போலீசாரை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது இரு தரப்பினரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரின் விசாரணை மற்றும் மேலதிக தகவல்களுக்காக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
