டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொழும்புவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்து அசத்தியது. 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மண்ணைக் கவ்வியது.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களான ஹெட், கிரீன், டேவிட் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிம்பாப்வே அணி காட்டிய இந்த விஸ்வரூபம், அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி வெறும் ஒரு போட்டி வெற்றி மட்டுமல்ல, உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சிறிய அணி ஜாம்பவான்களைத் தரைமட்டமாக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
