“நிறுவனம் என்பது ஒரு குடும்பம் போன்றது” என்ற கார்ப்பரேட் உலகின் தாரக மந்திரம், வேலைநீக்கத்தின் போது எவ்வளவு பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர் ஒருவர், திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டதால் நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஏர்டெல் அலுவலகத்தின் வெளியே நின்றபடி ஒரு இளைஞர் தேம்பித் தேம்பி அழுகிறார். “இந்த அலுவலகத்திற்காக எனது வாழ்வின் பொன்னான 17 ஆண்டுகளைக் கொடுத்துள்ளேன். இரண்டு தசாப்தங்களாக இந்த இடமே எனது உலகம் என்று உழைத்தேன்,” என்று அவர் விம்முகிறார். ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றும் போது அந்த இடத்தோடு ஏற்படும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு, ஒரு நொடியில் அறுக்கப்பட்ட வலியை அவரது கண்ணீர் உணர்த்துகிறது.

தன்னுடைய இந்த நிலைக்கு நிறுவன உரிமையாளரின் முடிவே காரணம் என்று அந்த ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார். நிறுவனம் புதிய கிளைகளைத் தொடங்கி வளர்ச்சியடைந்த போதிலும், பல ஆண்டுகளாக நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்த பழைய ஊழியர்களை நிர்வாகம் கைவிட்டுவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். செலவைக் குறைப்பதாகக் கூறி அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நிறுவனங்கள் ஓரங்கட்டும் போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

வேலை இழப்பு என்பது ஒரு தனிமனிதனின் வருமானம் பறிபோவது மட்டுமல்ல, ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கனவுகள் சிதைவதாகும். “இனி என் குடும்பத்தின் செலவுகளை எப்படிக் கவனிப்பேன்? குழந்தைகளின் கல்விச் செலவு, வீட்டுத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வேன்?” என்று அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தைச் செய்வது என்பது அந்த ஊழியருக்குப் பெரும் மலைப்பாகத் தெரிகிறது.

கார்ப்பரேட் உலகில் ‘விசுவாசத்திற்கு’ இனி இடமில்லையா என்ற கேள்வியை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.