உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஊர்வி, சம்பவம் நடந்த நாள் காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் 1 மணியளவில், பாழடைந்த ஒரு கிணற்றில் சிறுமி சாக்கில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், 31 வயதான திருமணமான ஒரு பெண் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. அந்தப் பெண்ணிற்கு 3 மாதங்களாக 17 வயது சிறுவன் ஒருவனுடன் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தனது கணவனும் குடும்பத்தினரும் வெளியே சென்றிருந்தபோது, தனது 17 வயது ஆண் நண்பனை வீட்டுக்கு அழைத்து அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சிறுமி ஊர்வி, இதைப் பார்த்துவிட்டு, தனது தந்தையிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்தப் பெண், சிறுமியின் கழுத்தைத் துணியால் இறுக்கி கொலை செய்து, பின்னர் அவரை சாக்கில் கட்டி பாழடைந்த கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார். விசாரணையின்போது, அந்தப் பெண்ணின் கையில் சிறுமி கடித்த பல் தடயமும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
