சர்வதேச டி20யில் மங்கோலியா  15 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தோனேசியாவுக்கு எதிரான இன்றைய (செப்டம்பர் 19) ஆட்டத்தில் மங்கோலிய பெண்கள் அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் இது 2வது குறைந்த ஸ்கோராகும். இந்த ஆண்டு ஸ்பெயினுக்கு எதிரான ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஐல் ஆஃப் மேன் (Isle of Man) அணி வெறும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து சர்வதேச டி20யில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

இந்தோனேசியா-மங்கோலியா இடையிலான ஆட்டத்தை பொறுத்தமட்டில் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தோனேஷியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை நி லு தேவி அரைசதம் (48 பந்துகளில் 62; 10 பவுண்டரி) அடித்து அசத்தினார். மேலும் நந்த சகாரினி 35 ரன்கள் எடுத்தார். மங்கோலிய பந்துவீச்சாளர்களில் மெண்ட்பயர், நமுஞ்சுல், ஜர்கல்சாய் கான், கன்சுக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார இலக்கை முறியடிக்க களம் இறங்கிய மங்கோலியா, ஆன்ட்ரியானி (3 ஓவரில் 8 ரன் கொடுத்து 4 விக்கெட் ), ரஹ்மாவதி ( 3 ஓவரில் 1 ரன் கொடுத்து 2 விக்கெட்), நி லு தேவி (2 ஓவரில் 4 ரன் கொடுத்து 2 விக்கெட்) ஆகியோரால் 10 ஓவரில் 15 ரன்களுக்குச் சரிந்தது.  இதனால் இந்தோனேஷியா 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மங்கோலியாவின் இன்னிங்ஸில் மொத்தம் 7 டக்அவுட்.. ஒருவரால் கூட குறைந்தபட்சம் இரட்டை இலக்கம் அடிக்க முடியவில்லை. மங்கோலிய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் பட்ஜர்கல் 5 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் எக்ஸ்ட்ராக்களின் அடிப்படையில் 5 ரன்கள் கிடைத்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிலும் நடைபெறும். இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.