உலக நடன தினத்தை நேற்று முன்னிட்டு, கடலின் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சென்னையைச் சேர்ந்த 11 வயதான தாரகை ஆராதனா மற்றும் 14 வயதான அஸ்வின் பாலா ஆகியோர், ராமேஸ்வரத்தின் பனந்தோப்பு கடற்கரையில் 20 அடி ஆழக் கடலுக்குள் நடனம் ஆடினர்.

இவர்கள் இருவரும் நீச்சல் மற்றும் ஆழ்கடல் நடனத்தில் பயிற்சி பெற்றவர்கள். சுவாச உபகரணங்கள் இல்லாமல், மூச்சை அடக்கி ஒவ்வொரு முறையும் 30–40 வினாடிகள் வரை நடனம் ஆடி, மேலே வந்து ஓய்வெடுத்த பின், மீண்டும் கடலுக்குள் சென்று மொத்தம் ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

இந்த நிகழ்வை தாரகையின் தந்தை மற்றும் ஆழ்கடல் பயிற்சியாளரான அரவிந்த் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். தாரகை, கடந்த ஆண்டு 29 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. “கடலுக்குள் நடனம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இது கடல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முயற்சி,” என தாரகை மற்றும் அஸ்வின் தெரிவித்துள்ளனர்.