கிரிக்கெட் விளையாட்டில் பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்துவீசுவது வழக்கம். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர், விசித்திரமான கின்னஸ் உலக சாதனைக்காக 100 கிலோமீட்டர் தூரம் ஓடிவந்து ஒரே ஒரு பந்தை வீசி அசத்தியுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சரியான பந்துவீச்சு ரன்-அப் தூரத்துக்கான உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியாக, சர்ரே மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாம் போடேனோ இந்த விபரீத மற்றும் சவாலான முயற்சியை மேற்கொண்டார்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தனது ஓட்டத்தைத் தொடங்கிய அவர், இரவு பகலாகத் தொடர்ந்து சுமார் 14 மணி நேரம் சாலைகளில் ஓடினார். இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று வோக்கிங் பகுதியில் உள்ள வாலி எண்ட் கிரிக்கெட் கிளம்பை சென்றடைந்தார். அங்கு தனது தந்தைக்கு முதல் பந்தை வீசி இந்தச் சவாலை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
The record for the longest ever run up. 😄 pic.twitter.com/EwyZadiQJZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 3, 2026
இந்த சாதனை முயற்சிக்கு கின்னஸ் நிறுவனம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. அதன்படி சாம் போடேனோ, முழுமையான கிரிக்கெட் வெள்ளை உடைகளை அணிந்திருக்க வேண்டும், அந்த 100 கி.மீ பயணம் முழுவதையும் கையில் கிரிக்கெட் பந்தைத் தாங்கியபடியே கடக்க வேண்டும், ஓட்டம் முடிந்ததும் ஓய்வெடுக்காமல் நேரடியாக ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு பந்துவீச வேண்டும்.
இந்த அனைத்து நிபந்தனைகளையும் அவர் வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்தச் சாதனையின் நோக்கம் வெறும் புகழுக்காக மட்டுமல்லாமல், புற்றுநோய் தொண்டு நிறுவனமான ‘The Ruth Strauss Foundation’ அமைப்பிற்காக நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் மூலம் அவர் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் ₹7.66 லட்சம் தொகையை நன்கொடையாகத் திரட்டியுள்ளார்.
முந்தைய சாதனையான 15 மைல் தூரத்தை வெகுதூரம் தாண்டி இந்த 100 கி.மீ ஓட்டத்தை சாம் வெற்றிகரமாக முடித்துள்ளார். எனினும், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரது அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் அதிகாரப்பூர்வமாகச் சரிபார்த்த பின்னரே இந்தச் சாதனை குறித்த இறுதி முடிவை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
