சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னணி முன்னாள் வீரரும் ‘சின்னத் தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி குறித்து அணி நிர்வாகத்திடம் பேசியிருப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​சமீபத்திய பேட்டி ஒன்றில் சிஎஸ்கே அணியுடனான தனது பிணைப்பு குறித்துப் பேசிய சுரேஷ் ரெய்னா, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி தொடர்பாக அணி நிர்வாகத்திடம் பேசியுள்ளேன். ஒருவேளை எனக்கு அந்தப் பொறுப்பான வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு அணி” எனத் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளார்.

​ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் எண்ணற்ற வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருந்த சுரேஷ் ரெய்னா, மீண்டும் பயிற்சியாளர் வடிவில் அணிக்குள் நுழைய விருப்பம் தெரிவித்துள்ள செய்தி சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. தோனி மற்றும் ரெய்னா கூட்டணி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் டக்அவுட்டில் இணையுமா என்ற எதிர்பார்ப்பில் மஞ்சள் படை ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.