சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 13 வயது மாணவி ஜூ ஷுஹான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படிக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க உதவும் செயலியை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார். பள்ளியில் படிக்கும் இவர், முறையான நிரலாக்கப் பயிற்சி இல்லாமலேயே இந்த செயலியை உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘சாய் சாங்’ என்று அழைக்கப்படும் இந்தச் செயலி, பெற்றோர் அருகில் இல்லாத நேரத்திலும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தானும் படிக்கும்போது கவனம் சிதறுவதை உணர்ந்த மாணவி, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இந்த யோசனையை உருவாக்கியுள்ளார். அவரது தம்பியும் செயலியின் ஆரம்பகட்ட பயனர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
இந்த செயலியை உருவாக்கியபோது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேவையான உதவிகளைப் பெற்றதாகவும், கடந்த ஆண்டில்தான் ஏ.ஐ. பயன்படுத்தத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், குழந்தைகள் கவனம் சிதறும்போது கோபப்படும் தாய் போன்ற உருவத்தை காட்டும் வசதி இருந்தது. பின்னர், குழந்தைகளுக்கு நேர்மறையான சூழலை வழங்கும் வகையில் அந்த வசதியை அவர் நீக்கியுள்ளார்.
ஹாங்சோவில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற தேசிய அளவிலான ஏ.ஐ. தயாரிப்பு சந்தைப்படுத்தல் போட்டியிலும் அவர் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தச் செயலிக்கு மூன்று நாட்களில் 90 ஆர்டர்கள் கிடைத்ததன் மூலம், அவருக்கு 18,000 சீன யுவான் கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
