தமிழக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குத் தொடர அனுமதி கோரி, புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் மீது, கடந்த 2006-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) பதிவு செய்த ரூ.2.07 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், 2020 முதல் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

ஏற்கனவே தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் ரூ.1.26 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை, 2025 மார்ச்சில் சிறப்பு நீதிமன்றத்தில் புகாரளித்தது. முன்னதாக கடந்த மார்ச் 24 அன்றும், தற்போது மே 20 அன்றும் தலைமைச் செயலாளர் கோரிய கூடுதல் ஆவணங்களுடன் நினைவூட்டல் கடிதங்களையும் தமிழக அரசுக்கு இ.டி. அனுப்பியுள்ளது.

கடந்த மே 10 அன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்யின் புதிய அரசுக்கு, செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குள் வந்துள்ள இந்த இரண்டாவது கடிதம் மிக முக்கிய அரசியல் சோதனையாகக் கருதப்படுகிறது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 218-இன் கீழ் (முந்தைய CrPC 197), கோரிக்கை விடுக்கப்பட்ட 120 நாட்களுக்குள் மாநில அரசு அனுமதி வழங்காவிட்டால், அது ‘வழங்கப்பட்டதாகவே கருதப்படும்’ (Deemed Sanction) என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அமலாக்கத்துறை தனது 4 பக்கக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநரிடமும் அரசிடமும் கோரப்பட்டு நிலுவையில் இருந்த இந்த அனுமதி விவகாரத்தை புதிய அரசு தற்போது பெற்றுக்கொண்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘தீய சக்தி’ என விமர்சித்த கட்சித் தலைவர்கள் மீது முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான அதிரடி முடிவை எடுக்கப் போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.