தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான செயல்முறை தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருபதாம் தேதி முற்பகல் முதல்  www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதேபோல 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வுகளாக எழுத இருப்பவர்கள் வரும் 19ஆம் தேதி முதல் முற்பகல்  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.