இன்று (பிப்ரவரி 7, 2026) கொழும்புவில் தொடங்கிய 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில், நெதர்லாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஒரு வழியாகத் திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளித்து 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 148 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் அணிக்கு, நடுகள வரிசையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சரிவு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. 98 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், திடீரென 114 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது.

​வெற்றிக்குக் கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் இருந்த பஹீம் அஷ்ரப் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். லோகன் வான் பீக் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசி, மைதானத்தையே அதிரவைத்தார். ஒரு கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் ஓ’டவுட் தவறவிட்டது பஹீமுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 19.3 ஓவரிலேயே பவுண்டரி அடித்து பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தது. 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த பஹீம் அஷ்ரப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு, இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.