நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அப்துல் ஹாதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆசிக் குன்னூரில் இருக்கும் அறிஞர் அண்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்துல் ஆசிக் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் எக்கோ ராக் எனப்படும் இயற்கை காட்சி முனை மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு நண்பர்கள் சுற்றித்திரிந்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அப்துல் ஆசிக் மலையிலிருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்ததால் நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து எப்படியாவது அப்துல் வீட்டிற்கு வந்து விடுவான் என நினைத்து அவர்கள் இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தனர். ஆனால் அப்துல் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது தான், அப்துல் நண்பர்களுடன் கடைசியாக இருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து கேட்டபோது நடந்தவற்றை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் எக்கோ ராக் மலைப்பகுதிக்கு சென்று அப்துல் தவறி விழுந்த இடத்திலிருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போதுதான் சிறுவன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

அவனது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மலையின் தாழ்வான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது அப்துல் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. நண்பர்கள் விசாரணையின் போது அச்சத்தில் மாற்றி மாற்றி பேசுவதால் உண்மை என்ன என்பது தெரியவில்லை.