தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப் படியை உடனடியாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியது. ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
போக்குவரத்து கழகத்தில் கடந்த 30 வருடங்களாக ஓய்வு பெற்று ஊழியர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மருத்துவ செலவுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் ஓய்வு பெற்றே 88 ஆயிரம் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 100 நாட்களில் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று அறிவித்த திமுக அரசு இன்னும் 600 நாட்கள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. எனவே தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது போன்று போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் உடன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.