சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கிறது. அதில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த வகை ஆமைகளை காப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக 1974 -ஆம் ஆண்டுகளிலே ஆமைகளுக்கான குஞ்சு பொரிப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டதாவது, ஆமைகளை காக்கும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக சென்னையில் ஆமைகளுக்கான மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்த மையமானது ஆமைகள் பாதுகாப்பு மட்டுமல்லாமல் ஆராய்ச்சி தரவுகளை சேகரிப்பது மற்றும் ஆமைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றையும் இலக்குகளாக கொண்டிருக்கிறது.

முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மையத்திற்கு உரிய ஒப்புதலை அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவரது கோரிக்கையை ஏற்று சென்னையில் ஆமைகளுக்கான பாதுகாப்பு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. காயம் ஏற்படக்கூடிய ஆமைகளை உடனடியாக மீட்டு அவற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் நல்ல முறையில் குணமடைந்த ஆமைகள் திரும்பவும் கடலுக்குள் விடப்படுகிறது. இந்த பணியானது தமிழ்நாடு அரசு வனம் மற்றும் வனவிலங்கு குற்ற தடுப்பு முகமையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் அவை நகரக்கூடிய பாரம்பரிய பகுதிகள் போன்றவை கண்டறியப்படுகிறது. இவை கடலில் இருக்கக்கூடிய ஆமைகளின் பெருக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதற்கான கண்காணிப்பு பணியில் கடல் கடலில் மீன் பிடி தொழில் செய்யும் மீனவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடல் பகுதியில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும் அவை கடல் பகுதிகளுக்கு தாராளமாக சென்று வரவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மேலும் கடற்கரையோரங்களில் குப்பைகளை சேகரிப்பது போன்றவை அவற்றிற்கு பெரும் தடையாக இருக்கின்ற காரணத்தினால் இந்த தடைகளும் நீக்கப்படும் என அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.