மராட்டியம் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி விகாஷ் ரஸ்தோகி என்பவர் மாநில அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். இந்த தம்பதியினர் மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயா பகுதியில் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 26 வயதில் மகள் லிபி என்பவர் உள்ளார். இவர் அரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் எல்எல்பி படித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தாய் தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது லிபி கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள ஜிடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய அறையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். தற்கொலை செய்து கொண்ட அவர் கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது . இதனால் விரத்தியில் இருந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.