கரூர் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளான். இந்த மாணவியை அந்த மாணவன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் எங்கு மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் அந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளான்.

பின்னர் அந்த 12 ஆம் வகுப்பு மாணவனும் அவருடைய நண்பர்களும் தலைமறை வாகிவிட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 12 ஆம் வகுப்பு மாணவனை பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மத்திய இணை மந்திரி எல். முருகன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் 10-ஆம் வகுப்பு சிறுமி ஒருவர், கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பள்ளி தாளாளரால், பள்ளி தலைமையாசிரியரால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் என்று பள்ளிச் சிறுமிகள் மீது எண்ணற்ற பாலியல் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சி வகுப்புகள் தேவைப்படுவதை, இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. சட்டம்-ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் தனது இரும்புக் கரங்களுக்குள் வைத்திருப்பதாய் கூறிக் கொள்ளும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்கும் எந்த வகையில் ஆறுதல் சொல்ல காத்திருக்கிறார்?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களோ, தனது துறையில் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற குற்றங்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக சமூகவலைதளங்களில் களமாடிக் கொண்டிருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

கரூர் மாவட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய மாணவிக்கு அரசின் உயர்தர சிகிச்சை முறை வழங்கப்பட வேண்டுமென்றும், குற்றத்தில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனங்களை பெற்றுத்தர வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.