தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், பார்கள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், பார்கள் திறக்கும் நேரம், கடைகள் மூடும் நேரம் ஆகியவை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. இதில் மனுதாரர் தலையிட முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. அதே சமயம் பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் டாஸ்மார்க் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பதற்கு பதிலாக டாஸ்மாக் கடைகளை  அரைமணி நேரத்துக்கு முன்பாக மூடலாமே என்று ஆலோசனை தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அரசிடம் விளக்கத்தைப் பெற்று தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணைக்கு அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.