100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை என வைஷ்ணவி விஜயகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தாழ்தள பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பலனளிக்கும் வகையில் இருக்காது, வயது முதியோர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்கும். எனவே 100% தாழ்தள பேருந்துகளை ஏன் வாங்க கூடாது என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில் ஐகோர்ட்டில் போக்குவரத்து துறை இன்று தாக்கல் செய்த அறிக்கையில், அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக வாங்குவது, இயக்குவது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக சாலையின் தரம் உயர்த்தப்பட வேண்டும், அதேபோல மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் தாழ்தள  பேருந்துகளுக்குள் புகழ்ந்து விடும்.

குறிப்பாக இந்த பேருந்துகளை கொள்முதல் செய்தால் ஒரு பேருந்தை வாங்க 80 லட்சம் செலவாகிறது. ஆனால் சாதாரண பேருந்துகளுக்கு 40 முதல் 42 லட்சம் செலவாகும். அதேசமயம் இயக்குவதற்கான செலவு பார்க்கும் போது தாழ்தள  பேருந்தை இயக்கும்போது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 41 ரூபாய் செலவாகும் என்றும், சாதாரண பேருந்துகளுக்கு அவ்வளவு செலவாகாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்த 100% தாழ்தள பேருந்துகளை இயக்குவதற்கு சாத்தியமில்லை என்ற விளக்கத்தை தமிழக அரசு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அப்போது நீதிபதிகள் தாழ்தள பேருந்துகளை முழுமையாக இயக்க முடியாவிட்டால் பேருந்தின் பின்புறம் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஏறி இறங்கும்படி சாய் தல வசதி ஏற்படுத்த முடியுமா? என்று மாற்று வழி குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.