லண்டனில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு விஜயாதரன் என்ற வாலிபர், அங்கு ஒரு பகுதிநேர தொழிலை (Side Hustle) முயன்று பார்த்து, அது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். லண்டன் தெருக்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி போலராய்டு (Instant Polaroid) புகைப்படங்களை எடுத்துக்கொடுத்து பணம் சம்பாதிக்க முடியுமா என்று சோதிக்க நினைத்துள்ளார்.
இதற்காக சுமார் 11,000 ரூபாய் மதிப்பில் ஒரு இன்ஸ்டன்ட் கேமராவை வாங்கிக்கொண்டு, லண்டனின் பிஸியான தெரு ஒன்றிற்குச் சென்று, “கியூட் போலராய்டு 5 பவுண்ட்” (சுமார் ரூ.640) என்று எழுதப்பட்ட அட்டைப் பெட்டியுடன் நின்றுள்ளார். அவர் எதிர்பார்த்தபடியே அடுத்தடுத்து இரண்டு கஸ்டமர்கள் வந்து வெறும் 10 நிமிடத்தில் 10 பவுண்டுகள் (சுமார் ரூ.1,200) வரை லாபம் கிடைத்துள்ளது.
தான் பெரிய அளவில் கோடீஸ்வரனாகப் போகிறோம் என்று விஷ்ணு நினைத்த அடுத்த நிமிடமே, அங்கு வந்த லண்டன் போலீஸ் மற்றும் கவுன்சில் அதிகாரிகள் அவரது பிசினஸை தடுத்து நிறுத்தியுள்ளனர். லண்டன் தெருக்களில் அனுமதி இன்றி எந்தப் பொருளையும் விற்கக் கூடாது என்று கூறி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தெரியாமல் செய்துவிட்டதாக விஷ்ணு தனது வீடியோவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “இங்கிலாந்தில் முறையான அனுமதி பெற்று இதைச் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம், செம ஐடியா” என்று சிலர் பாராட்டி வரும் நிலையில், “இந்தியாவை போல நினைத்து வெளிநாடுகளில் இப்படி அனுமதியின்றி பிசினஸ் செய்தால் விசா ரத்தாக வாய்ப்புள்ளது, விதிகளுக்கு மதிப்பளியுங்கள்” என்று பல நெட்டிசன்கள் எச்சரித்தும் வருகின்றனர்.
