கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கலைச்செல்வி தனது குழந்தை, தந்தை ராஜமாணிக்கத்துடன் அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மதியம் கலைச்செல்வி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துவிட்டு அருகில் இருக்கும் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அவரது குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அடுப்பில் பற்றி எரிந்த தீ திடீரென குடிசையில் பரவி வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. வயது முதிர்வு காரணமாக ராஜமாணிக்கத்தால் எழுந்து வர இயலவில்லை.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜமாணிக்கத்தை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். குழந்தை வீட்டிற்குள் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. இதனை தொடர்ந்து கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய கலைச்செல்வி தனது குழந்தை உள்ளே தூங்கிக் கொண்டிருப்பதாக கூறி கதறி அழுதபடி உள்ளே செல்ல முயன்றார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் கலைச்செல்வியை தடுத்து நிறுத்தி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குழந்தை உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.