கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நீங்கள் தங்க நகை அணிந்திருந்தால் உதவி தொகை தர மாட்டார்கள், எனவே அதனை கழற்றி தந்தால் ஒரு பேப்பரில் மடித்து தருகிறேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி மூதாட்டி 2 கிராம் தங்க நகை கழற்றி அவரிடம் கொடுத்துள்ளார்.

அதனை வாலிபர் தனது சட்டை பையில் வைத்துக்கொண்டு 2 சிறிய கற்களை பேப்பரில் மடித்து மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு அதிகாரியை அழைத்து வருகிறேன் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்தில் பேப்பரை பிரித்து பார்த்தபோது சிறிய கற்கள் இருந்ததை கண்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மூதாட்டி திருடன் திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரத்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து நகையை மீட்டனர்.