சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (திமுக கூட்டணி) செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டி.கே.ஜி. நீலமேகம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்துக் குறிப்பிடுகையில் திருவாரூர் கூட்டத்திற்குச் சென்றபோது திமுக தலைவர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டார். ‘நீலமேகம், சோர்வாக இருக்கிறாயா?’ எனப் பரிவுடன் கேட்டார். அதற்கு நான், ‘இயக்கம்தான் எனக்குப் பெரிது; நான் என்றைக்கும் சோர்வடைய மாட்டேன், தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்’ எனப் பதிலளித்தேன்,” என்றார்.
தொடர்ந்து திருவையாறு தொகுதி வேட்பாளரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன் மேடையில் பேசுகையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதாவது, திருவையாறு தொகுதியில் நான் 8-வது முறையாகப் போட்டியிடுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால் இத்தனை முறை போட்டியிடுவது எனக்கே ஒருவித வெட்கத்தைத் தருகிறது. நான் முதல்முறை போட்டியிட்ட 1989-ஆம் ஆண்டில், எந்தத் தம்பதிக்கு நான் திருமணம் செய்து வைத்தேனோ, அவர்களின் பையன் இப்போது வாக்காளராகிவிட்டார்.
அதுமட்டுமின்றி, அவருக்குத் திருமணமாகி இப்போது அவரது மனைவி, மகன் என அந்த முழு குடும்பமே வாக்களிக்கின்றனர். இப்படி மூன்று தலைமுறை வாக்காளர்களைக் கண்ட பிறகும், தலைவர் மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அந்த வெற்றியைத் தலைவரிடம் சமர்ப்பிப்பேன்,” என உறுதிபடத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
