சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கரணை நோக்கி தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்றனர். இவர்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் ஏறினர். அப்போது சொக்கலிங்கம் என்பவர் தன்னுடைய கார் பழுதானதால் அங்கு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்.

அவர் பார்க்கிங் விளக்குகளை எரியவிட்ட வாரே நிறுத்தி இருந்தார். இதை கவனிக்காத ஷாம் ரவி காரின் பின்னால் பயங்கரமாக மோதினார். இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் ‌ பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் 2 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.