தன்னுடைய பெற்றோருடன் காரில் ஜாலியாகப் பயணம் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுமி, திடீரென செய்த ஒரு செயல் இப்போது ஒட்டுமொத்த இணையதளத்தையும் நெகிழ வைத்துள்ளது. காரின் முன் இருக்கையில் தனது தந்தைக்கு அருகில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமி, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, அருகில் ஒரு நபர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வதைக் கவனித்தார். சட்டென்று ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி, “அங்கிள்.. ஹெல்மெட் போடுங்க!” என அந்தச் சிறுமி கொடுத்த மழலை எச்சரிக்கை, காரில் இருந்தவர்களைத் தூக்கி வாரிப் போட்டது.

​சிறுமியின் இந்த திடீர் அக்கறையைக் கண்டு காரில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அந்த ஸ்கூட்டர் நபர் அசடு வழிந்தபடி, “பக்கத்துலதான் பாப்பா போறேன்” எனப் பதிலளித்தார். தங்களுக்குத் தெரியாமலேயே இந்தப் பொன்னான தருணத்தைக் கேமராவில் பதிவு செய்திருந்த அந்தப் பெற்றோர், அதை இணையத்தில் பகிர, இப்போது அந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “வெளியே போனால் ஹெல்மெட்.. உள்ளே இருந்தால் சீட் பெல்ட்” என்ற சாலைப் பாதுகாப்புப் பாடத்தை, ஒரு சிறுமி மிக எளிமையாகச் சொல்லிக் கொடுத்த விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது!