பெருவின் ஹுவரல் நகரில் சமீபத்தில் நடந்த ஒரு  சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. பத்திரிகையாளர் கார்லோஸ் ஆல்பர்டோ மெசியாஸ் ஜராத்தேவின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரியும் டைனமைட் குச்சியை வீசிய சம்பவத்தில், அவரது செல்ல நாய் ‘மான்சிஸ்’ தனது உயிரைப் பணயம் வைத்து குடும்பத்தைப் பாதுகாத்தது.

இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தின் போது, இரவில் வீட்டு முன் வந்த ஒருவன் எரியும் டைனமைட்டை (வெடிக்கும் மர்ம பொருள்) ஜராத்தேவின் வீட்டின் உள்ளே வீசுகிறான். அப்போது,  மான்சிஸ் என்ற நாய் அதனை தனது வாயில் பிடித்து கொண்டு, வீட்டிற்குள் அல்லது அருகில் உள்ளவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதபடி தடுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக, டைனமைட் வெடிக்கவில்லை.

 

ஜராத்தேவின் குடும்பத்தில் 10 பேர் மற்றும் 3 செல்ல நாய்கள் உள்ளனர். அதில், மான்சிஸ் தனது துணிச்சலான செயலில் முக்கிய பங்கு வகித்தது. தன்னைக் காத்துக் கொள்ளாமல் வீசிய டைனமைட்டை வாயில் பிடித்த மான்சிஸ், இதில் தனது தொண்டைப் பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளானது. தற்போது, அந்த நாய்க்கு குரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்துக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் மான்சிஸ் நாயின் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.  “மிகவும் துணிச்சலான நாய். அதன் காரணமாக, இன்று ஒரு முழு குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது,” என ஒருவர் கருத்து தெரிவித்தார். நாய்கள் மனிதர்களின் உண்மையான நண்பர்கள் என்பதற்கு இது ஒரு சான்று,” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டைனமைட் வீசிய நபர் யார், ஏன் இவ்வாறு செயல்பட்டார் என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.