“இந்தியாவில் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார்” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ள கருத்துக்கு, “இந்தியா ஒரு இந்து நாடு; பிரதமர் எப்போதும் இந்துவாகவே இருப்பார்” என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (A.I.M.I.M.) கட்சி தீவிரமாகப் போட்டியிடுகிறது. இதையொட்டி சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: “இந்திய அரசியல் சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சமமான உரிமையையும் அந்தஸ்தையும் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வரும் நாள் நிச்சயம் வரும். அதுவே எனது கனவு. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின்போது நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது நடந்தே தீரும்.” என்றார்.
ஓவைசியின் இந்தப் பேச்சுக்கு அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இந்தியா என்பது ஒரு இந்து நாடு மற்றும் இந்து நாகரிகத்தைக் கொண்டது. எனவே, இந்தியப் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமர் ஆவார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில், ‘பிரதமர் பதவி’ குறித்த இந்த மத ரீதியான விவாதம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
