“இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது எனது கனவு” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ள கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அசாதுதீன் ஓவைசி, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்துத் தந்த இந்திய அரசியல் சாசனம், அனைத்து சமூக மக்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதன்படி, இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் நாட்டின் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ அல்லது ஒரு மாநகராட்சி மேயராகவோ பதவி வகிக்க முடியும். வரும் காலத்தில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியப் பிரதமராக வருவார்; அதுவே எனது கனவு.” என்றார்.

ஓவைசியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா, ஓவைசி தனது பேச்சைச் செயலில் காட்ட வேண்டும் எனச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்: “பிரதமராக வேண்டும் என்று கனவு காணும் சுதந்திரத்தை அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்த நற்பணியை ஓவைசி தனது சொந்தக் கட்சியிலிருந்தே தொடங்க வேண்டும் என விரும்புகிறேன். முதலில் ஹிஜாப் அல்லது புர்கா அணியும் ஒரு பெண்ணைத் தனது கட்சியின் தேசியத் தலைவராக ஓவைசி நியமிப்பாரா? கட்சியின் பெயரிலேயே மத அடையாளத்தைச் சுமந்துகொண்டு திரியும் அவருக்கு, மதச்சார்பின்மை குறித்துப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.”

இதே விவகாரம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் சாசனத்தின்படி யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு வரலாம் என்பதில் தடையோ மாற்றுக் கருத்தோ இல்லை. இருப்பினும், இந்தியா ஒரு இந்து நாடு என்பதால், இந்தியப் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை,” என்று தெரிவித்தார்.