ஐதராபாத்தைச் சேர்ந்த ஃபைசல் ரஹ்மான் என்பவரின் பைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், 90 நாட்களாகியும் போலீசாரால் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், எதிர்பாராத விதமாக ரஹ்மானின் மொபைலுக்கு ஒரு டிராஃபிக் சலான் (Traffic Challan) வந்தது. அதில் இருந்த ஒரு புகைப்படம் அவரை அதிர வைத்தது.

அந்தப் புகைப்படத்தில் அவரது திருட்டுப் போன பைக்கை ஒரு நபர் ஓட்டிச் செல்வது மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. போலீசாரால் செய்ய முடியாததை, டிராஃபிக் கேமராக்கள் திருடனின் முகத்தோடு படம் பிடித்துக் காட்டியுள்ளன.

இந்தச் சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதேபோல் ஒடிசாவிலும் ஒருவருக்கு பைக் திருடு போன நிலையில், திருடன் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் வந்த சலான் புகைப்படத்தை வைத்து போலீசார் திருடனைக் கைது செய்துள்ளனர்.

ஆனால், பல நகரங்களில் திருட்டுப் போன வாகனங்களின் விவரங்களும், டிராஃபிக் போலீசாரின் தரவுத்தளமும் (Database) இணைக்கப்படாமல் இருப்பதே திருடர்கள் தப்பிப்பதற்குக் காரணமாக உள்ளது.

ஒருபுறம் வாகனம் திருடு போனதாகப் புகார் பதிவானாலும், மறுபுறம் அதே வாகனத்திற்கு அபராதம் விதித்து உரிமையாளருக்கே அனுப்பும் வினோத சூழல் இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய ரஹ்மான் வழக்கில், திருடனின் முகம் தெளிவாகக் கிடைத்துள்ளதால் போலீசார் சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.