இந்திய விடுதலையின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக காசி (வாரணாசி) மக்கள் கையாண்ட விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான போராட்ட முறை அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தேசியக் கொடியை ஏற்றித் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் பனாரஸின் புகழ்பெற்ற வெற்றிலையையும், மூவர்ண பர்ஃபியையும் பயன்படுத்தி இந்தியப் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கே சவால் விடுத்துள்ளனர்.

வாரணாசியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ‘நேதாஜி பான் பந்தர்’ கடையின் உரிமையாளர் ராம் நாராயண் சௌராசியா, புரட்சியாளர்களுக்கு வழங்கிய வெற்றிலையின் அடியில் சௌக் காவல் நிலையத்தின் ரகசிய நகர்வுகளைப் பற்றி எழுதி அனுப்பியுள்ளார். இந்த ரகசியத் தகவல்கள் மூலம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துள்ளனர். பின்னாள்களில் லால் பகதூர் சாஸ்திரி, ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் கூட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடைக்கு வருகை தந்துள்ளனர்.

அதேபோல், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தத் தடை விதித்தபோது, அங்குள்ள இனிப்புக் கடைக்காரர்கள் ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்தனர். தாத்தேரி பஜாரைச் சேர்ந்த மதன் கோபால் குப்தா மற்றும் பச்சானு சா போன்ற வியாபாரிகள் பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி ‘மூவர்ண பர்ஃபி’ என்ற சுவையான இனிப்பை உருவாக்கினர்.

இதன் மூலம் மக்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ‘ஜவஹர் லட்டு’, ‘காந்தி கௌரவ்’ மற்றும் ‘வல்லப சந்தேஷ்’ போன்ற பெயர்களிலேயே இனிப்புகளைத் தயாரித்து ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு நேரடியாகப் பதிலடி கொடுத்தனர். உணவின் வழியே தேசபக்தியை வளர்த்த இந்த உணர்வைக் கண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

தற்போது இந்த ‘மூவர்ண பர்ஃபி’க்குக் புவிசார் குறியீடு  கிடைத்துள்ளதால், இதன் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. இன்றளவும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது பனாரஸில் இந்த மூவர்ண பர்ஃபி மற்றும் ஜவஹர் லட்டு தயாரிப்பும் விற்பனையும் மிக விசேஷமாக நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் இந்த இனிப்பான வரலாறு இன்றைக்கும் காசியில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.