தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசு தனது ஆட்சியில் எந்தவொரு புதிய உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றாமல், அதிமுக ஆட்சிக்கால சாதனைகளுக்குத் தனது பெயரைச் சூட்டி ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய இரண்டுமே அதிமுக ஆட்சியில் தனது சிந்தனையில் உதித்து, பார்த்துப் பார்த்துச் செய்த வரலாற்றுச் சாதனைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
2018-ல் தாம் தொடங்கி வைத்த 3 சதவீத ஒதுக்கீட்டுப் பலன்களுக்கு, பணி நியமன ஆணைகளை மட்டும் வழங்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக இருப்பதாகவும், சொந்த ஆட்சியின் சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்கத் தைரியம் இல்லாததால் முதல்வர் இவ்வாறு ‘சவாரி’ செய்வதாகவும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.