மத்தியபிரதேச மாநிலம் இந்தோர் பகுதியில் பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் ஸொமேட்டோ நிறுவனத்தின் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு உணவு விநியோகம் செய்வது போல் பைக்கில் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த பெண் ஸொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரிகிறாரா அல்லது விளம்பர யுக்தியாக ஸொமேட்டோ நிறுவனம் அவரை பயன்படுத்திக் கொண்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் ஸொமேட்டோ உணவு விநியோக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் இதுபோன்று எதையும் செய்யவில்லை.

தலைக்கவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்ட நாங்கள் அனுமதிப்பதில்லை. அதே போன்று இந்தோரில் ஸொமேட்டோ நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் தலைமை பொறுப்புகள் எதுவும் இல்லை. அவர் உணவு விநியோகிப்பது போன்று புகைப்படம் வெளியிட்டிருப்பது எவரோ இலவச விளம்பரம் செய்வதை போல் உள்ளது. மேலும் ஒரு பெண் உணவு விநியோகம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப வாழ்க்கை நிலை மாறும். எங்கள் நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் உணவு விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். அவர்களால் நாங்கள் பெருமை கொள்கின்றோம்” என பதிவிட்டுள்ளார்.