பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் இல்லை என்றும், ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தான் நாட்டை வழிநடத்தி வருகிறார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சௌத்ரி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், “இந்த முக்கிய பேச்சுவார்த்தையை வழிநடத்துவது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பா அல்லது ராணுவ தளபதி அசிம் முனீரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த முன்னாள் தகவல் துறை அமைச்சர் பவாத் சௌத்ரி கூறுகையில், உண்மையைச் சொல்லப்போனால், இதில் இரண்டு கருத்துகளுக்கே இடமில்லை. தற்போது பாகிஸ்தானின் உண்மையான தலைவர் ஜெனரல் அசிம் முனீர் தான். அனைத்து முக்கியமான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ராணுவத்திடமே உள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, அசிம் முனீரைத் தான் பாகிஸ்தானின் தலைவராகக் குறிப்பிட்டார். ஷெபாஸ் ஷெரீப் பற்றி அவர் பேசக்கூட இல்லை என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

 

 

ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் பாகிஸ்தான் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவின் முக்கியச் செய்தியுடன் ஈரானுக்குப் பயணம் செய்யவுள்ளது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உறுதி செய்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் தொடங்கப்பட்ட இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக, பாகிஸ்தான் பிரதிநிதிகள் தெஹ்ரானுக்குச் சென்று ஈரானிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். இதன் மூலம் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.