இந்தூர் மாநகரில் உள்ள ‘ஃபிராங்கி கஃபே’ உணவகத்திற்கு வெளியே இளம்பெண் ஒருவர் நான்கு மதுபோதை நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களுடன் உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த கும்பல் அவரை வம்புக்கிழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளது.

இதனைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணையும் அவரது நண்பர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

மேலும் சம்பவம் நடந்த உடனே அப்பெண்ணின் நண்பர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த கும்பலிடமிருந்து அவரை மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நகரின் முக்கியப் பகுதியில், மக்கள் நடமாட்டம் உள்ள ஓரிடத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்தத் துயரம், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.