குவாலாலம்பூரில் இருந்து அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை, சுங்க வரித்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.

அவர் ‘கிரீன் சேனல்’ வழியாக வெளியேற முயன்றபோது, அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அதிகாரிகள் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவருக்குத் தீவிர உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, அந்தப் பெண் தனது ரகசிய உறுப்புக்குள் கப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 553 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 83.29 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்கூட்டியே கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ள போலீசார், இதன் பின்னணியில் இருக்கும் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.