கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் சேர்ந்தவர் அஜித் குமார்(26). இவர் கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு அஜித்குமாருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அபிஷா(22) என்ற பெண்ணுக்கும் திருமணமானது. அபிஷா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். அஜித் குமார் அவ்வபோது மருத்துவமனைக்கு சென்று அபிஷாவை பார்த்து வருவது வழக்கம். கடந்த 2-ஆம் தேதி அபிஷா வேலைக்கு சென்ற நிலையில் 6-ஆம் தேதி அஜித்குமார் தனது மனைவியை பார்க்க சென்ற போது அவர் மருத்துவமனையில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கேட்டபோது உறவினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி வாலிபருடன் பைக்கில் அவசர அவசரமாக அபிஷா புறப்பட்டு சென்றதாக கூறியுள்ளனர். இதனால் அஜித் குமார் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.

நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் அஜித் குமாரை தொடர்பு கொண்டு உனது மனைவி வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளது என கூறி அந்த வீடியோவை காண்பித்தார். அந்த வீடியோவில் உறவினர்கள் வாழ்த்து கூற அபிஷா வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து அஜித்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது வீடியோவை பார்க்கும் போது இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டது போல தான் தெரிகிறது. அபிஷா பிடிபட்டால் தான் உண்மை தெரியவரும் என கூறியுள்ளனர்.