உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்தப் பெண்ணை சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகிறார்கள். அவர்கள் மழை பெய்யும் சமயத்திலும் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ள நேரத்தில் இளம்பெண்ணை கொடூரமாக துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு ஆணும் பெண்ணும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை தெளிக்க ஆரம்பித்தனர். அதோடு பைக்கை பின்னால் இருந்து இழுத்தனர். இதில் நிலை தடுமாறி அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் லக்னோ உதவி காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் மற்றும் கூடுதல் காவல் ஆணையர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.