ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஈரானின் தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே பிராந்தியத்தில் நிரந்தர அமைதியைக் கொண்டு வர முடியும் என்று சவூதி இளவரசர் நம்புவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக, ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் கார்க்  தீவைக் கைப்பற்றவும், தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவும் சவூதி தரப்பு அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கார்க் தீவு வழியாகவே ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடப்பதால், அதைத் தாக்குவது ஈரானை நிலைகுலையச் செய்யும்.

இருப்பினும், பொதுவெளியில் சவூதி அரேபியா அமைதியையே விரும்புவதாகக் கூறி வருகிறது. அமெரிக்கா தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், சவூதி மற்றும் இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு மத்திய கிழக்கில் போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.