புதுச்சேரி லாஸ்பேட்டையில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் வந்த ஷார்ப்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்தார். அதன் பின் அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனியார் ஏஜென்சி அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்த அவர், கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதோடு விசா பெறுவதற்கு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய சுரேஷ்குமார் 17.71 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்  வேலை வாங்கி தரவில்லை. தான் ஏமாந்ததை அறிந்த சுரேஷ்குமார் கலந்த 22 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த கும்பலை தேடி வந்தனர். அதில் சுரேஷ்குமாரை ஏமாற்றியது உத்திர பிரதேசத்தை சேர்ந்த அசம்கான் என்பவரின் கும்பல் என்பதும், பெங்களூரில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுபம் ஷர்மா (29), தீபக்குமார் (28), ராஜ்கவுண்ட் (23), நீரஜ்குர்ஜார் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அந்த கும்பலிடம்  விசாரணை நடத்தப்பட்டது.

அதில் இவர்கள்  இதேபோன்று மொத்தம் 3400 பேரை ஏமாற்றியதாக தெரியவந்தது. இவர்களிடமிருந்து 21 மொபைல் போன்கள், 2 பாஸ்போர்ட் , 1 சிம் கார்டு, 1 லேப்டாப், 64 ஏடிஎம் கார்டுகள், 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு மோசடி செய்து அசாம்கானுக்கு அளிக்கும் பணத்தில் 50% கமிஷனாக நால்வரும் வாங்கியுள்ளனர். இந்த பணத்தைக் கொண்டு 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், 1.16 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்து, முன்பணமாக 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.