தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்கள். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பழனிக்கு காரில் வந்தார். அவர் பழனி முருகனுக்கு மயில் காவடி எடுத்தார். அதன்படி அடிவாரத்தில் இருந்து திரு ஆவின் குடி கோவிலுக்கு சென்ற அண்ணாமலை அங்கிருந்து பாத விநாயகர் கோவில் படிப்பாதையை அடைந்தார்.

அப்போது அந்தப் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது. அதாவது மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வெளியேறுவதற்காக அந்த பாதை மாற்றி அமைக்கப்பட்டு இருந்த நிலையில் போலீசார் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்களை வேறு பாதையில் செல்லுமாறு கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் அதே பாதையில் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கோவிலுக்கு சென்றனர். மேலும் அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு படிப்பாதை வழியாக அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கிளம்பினர்.