19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மீண்டும் அணியில் இணைந்தார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, பெங்களூருவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தப் போட்டியில் ‘இம்பேக்ட் பிளேயர்’ பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இதன்படி, பில் சால்ட் உடன் தொடக்க வீரராகக் களம் புகுந்த கோலி, தனது வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்திருந்தபோது, எல்லைக்கோட்டு அருகே கேட்ச் கொடுத்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.
Anushka Sharma Disappointed when Virat Kohli dismiss at 49 runs pic.twitter.com/cyYgIUND3M
— Learn-Survive (@pandu291190) April 15, 2026
கோலி ஒரு ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்டாலும், அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கோலி அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் 49 ரன்களில் அவுட் ஆனதைக் கண்டு அனுஷ்கா கடும் அதிர்ச்சியடைந்தார்.
அவர் சோகத்துடன் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்த காட்சிகள் கேமராவில் பதிவாகின. தற்போது அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘கோலி அரைசதத்தை தவறவிட்ட வருத்தம் அனுஷ்கா முகத்தில் அப்படியே தெரிகிறது’ என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
