ஜெய்ப்பூரில் வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் வித்யாதர் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 63 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, தனது காரை ஒரு டெம்போ டிராவலர் வாகனத்திற்கு முன்பாக நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கும் வங்கி அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஏற்பட்ட கடும் மன உளைச்சல் மற்றும் ஆத்திரத்தால், அந்த அதிகாரி திடீரென நிலைகுலைந்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

“>

 

மேலும் அவர் மயங்கி விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய இடப்பிரச்சினைக்காக நடந்த மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.