திருமணச் சடங்கின் போது விளையாடப்பட்ட விளையாட்டில் தோல்வியடைந்த ஆத்திரத்தில், மணமகன் மணப்பெண்ணைத் தலையில் பலமாகத் தாக்கிய சம்பவம் உஸ்பெகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்த வீடியோவில், திருமணத்திற்குப் பிந்தைய பாரம்பரிய சடங்கு ஒன்று நடைபெறுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் பிரபலமாக உள்ள ‘மோதிரம் தேடும் விளையாட்டு’ போன்ற ஒரு போட்டியில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஈடுபடுகின்றனர். இதில் மணமகள் மிக வேகமாகச் செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறார்.

தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில் மணமகள் மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்துகிறார். ஆனால், தனது தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாத மணமகன், திருமண மேடை என்றும் பாராமல், அருகிலிருந்த மணமகளின் தலையில் பலமாக ஒரு குத்து விடுகிறார்.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன மணமகள், அதிர்ச்சியில் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே சிலையாக நின்றார். பின்னர் அங்கு வந்த பெண் உறவினர் ஒருவர், மணமகளை மேடையிலிருந்து அழைத்துச் சென்றார். ஆனால், இவ்வளவு பெரிய தவறைச் செய்தும் மணமகன் எவ்வித வருத்தமுமின்றி அமைதியாக மேடையிலேயே நின்றிருந்தது பார்வையாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மணமகனின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “பொது இடத்திலேயே இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்பவர், மூடிய அறைக்குள் எப்படி நடந்துகொள்வார்? இப்போதே இந்தத் திருமணத்தை முறித்துக் கொள்வதே மணமகளுக்குப் பாதுகாப்பு” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், மணமகனை  ஆபத்தானவர் என்றும் மக்கள் சாடி வருகின்றனர். விளையாட்டுக்காகச் செய்யப்பட்ட ஒரு சடங்கை கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்ட மணமகனின் செயல், மனிதநேயமற்றது எனப் பலரும் குமுறி வருகின்றனர்.