உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காகப் பெற்ற தாயையும் பச்சிளம் குழந்தையையும் கணவன் வீட்டார் நடுத்தெருவில் விட்டுச் சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுமார் 11 மாதங்களுக்கு முன்பு திருமணமான முன்தரின் என்ற பெண், கடந்த வாரம் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்த கணவன் வசிம் மற்றும் அவரது குடும்பத்தினர், பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் தையல் பிரிப்பதற்காக வந்திருந்த முன்தரினை, அவரது கணவர் மற்றும் மைத்துனர்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியதோடு, குழந்தையுடன் மருத்துவமனைக்கு வெளியேயே தூக்கி எறிந்துள்ளனர்.

இந்தக் கொடுமையின் உச்சமாக, “பெண் குழந்தை நமக்கு வேண்டாம், இந்த மகளை 3 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிடு” என முன்தரினின் மைத்துனர் பேரம் பேசியதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட பெண்ணின் பெற்றோரும் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வெளியே நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

“>

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தம்பூர் காவல்துறையினர், மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவன் வசிம் மற்றும் அவரது உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் குழந்தையைப் பாரமாக நினைத்து, பிஞ்சு என்றும் பாராமல் விற்பனை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிஜ்னோர் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.