சென்னையில் ‘SIR’ பணிகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, கட்சித் தொண்டர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்களில் இடம்பெற்ற வாசகங்கள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. அந்தப் போஸ்டர்களில், திருமாவளவன் ‘நாளைய முதல்வர்’, ‘மக்களின் முதல்வர்’, ‘களத்தில் முதல்வர்’ போன்ற வாசகங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டப்பட்டிருந்தார்.
அதிமுக, திமுக கூட்டணிகளில் விசிகவுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் ஏற்கெனவே நிலவி வருகிறது. இந்தச் சூழலில், “நான் முதல்வர் பதவிக்குத் தகுதி இல்லாதவனா?” என்று திருமாவளவன் ஒருமுறை பொதுவெளியில் பேசியிருந்தார். தற்போது தொண்டர்கள் ஒட்டியுள்ள இந்தப் போஸ்டர்கள், கூட்டணிக்குள் விசிகவின் அரசியல் இலக்கு மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், திமுக கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
