உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் உள்ள சாதன்பூர் மண்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் குறைந்தது 10 பேர் பலத்த காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு, ஃபரூக்காபாத்தின் கத்ரி கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்றுநடந்துள்ளது. வெடிப்பின் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. அதில் உள்ளே இருந்தவர்கள் பலரும் காயமடைந்தனர்.

வெடிப்புக்குப் பிறகு மீட்பு குழுவினர் விரைந்து சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இந்த விபத்து நேரத்தில் பயிற்சி மையத்தின் முதல் மாடியில் இருந்த  அபய் (10), நிகில் (10), நிகில் (12), அன்ஷுல் (14), ஆயுஷ் யாதவ் (13), அபய் ராஜ்புத் (14), பிரபாத் (17), ஆகாஷ் சக்சேனா (25), ரிதம் யாதவ் (12), அன்ஷிகா குப்தா (13), ஆகாஷ் காஷ்யப் (24)ஆகியோர்  காயமடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்த செப்டிக் டேங்கில் மீத்தேன் வாயு அதிகமாகக் குவிந்து, அதனால் வெடிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் உண்மை காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
மீத்தேன் ஒரு தீவிர எரிபொருள் வாயு என்பதால், காற்றோட்டமின்றி கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் அது வெடிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வெடிப்பின் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவில் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறினர். கட்டடத்தின் சுவர்கள், கான்கிரீட் பாகங்கள் வெடிப்பின் தாக்கத்தில் பல மீட்டர் தூரம் தூக்கி எறியப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் ஒரு இரும்பு கிரிலும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கட்டடத்திற்கு வெளியே நின்றிருந்த வாகனங்களும் பெரிதும் சேதமடைந்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வெடிப்புக்கான சரியான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என ஃபரூக்காபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.