புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சோதனை செய்த போது அந்த பள்ளி வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் இருந்தததை பார்த்தனர்.

அதனால் இது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மோப்ப நாயுடன் சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது ஆறு சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும் சிறிது தூரம் சென்ற பின் நடந்து செல்கின்ற காட்சியும் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கிய பட்டாசுகள் மீதமிருந்ததால் அதனை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூபில் பார்த்துள்ளனர். அந்த youtube வீடியோவில் அடிப்படையில் இரண்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அந்த இரண்டு வெடிகுண்டில் ஒன்றை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டுமே வந்துள்ளது. இதனால் மற்றொரு வெடிகுண்டையும் வீசியுள்ளனர். அப்போதுதான் மிகுந்த சத்தத்துடன் அந்த வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரையும் மீட்ட காவல்துறையினர் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு சிறுவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.